தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும்தில்லை
ஊர்ர் தம் பாகத்துமைந்தனே உலகேழும் பெற்ற
சீரபிராமி அந்தாதி எபோதுமென் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே
உதிக்கின்ற செங்கதிர்! உச்சித்திலகம்! உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம்! மாதுளம்போது! மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி! மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி! எந்தன் விழித்துணையே.
கிழக்கில் முளைத்த செங்கதிரைக் கண்ட மறுகணம் அபிராமி அந்தாதியை முணுமுணுத்தது கமலாவின் வாய். கமலாவின் வாய். தாய் அபிராமியின் கருணையில்லாமல் விமானப் பயணம் சுமுகமாக முடிந்து சென்னை வந்து இறங்கி இருக்கமாட்டார்கள் கமலா வாசன் தம்பதியர். டெல்லாஸிலிருக்கும் மகள் சத்யாவிற்குத் தான் எத்தனை பிரச்சனைகள்? பிரசவத்திற்குத் துணைக்கு இருக்கவென்று போய் ஆறுமாதம் தங்கியதால் தானே அவளுடைய பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது அந்நிய நிலத்தில். சின்னச்சின்ன விஷயங்கள் கூட விஸ்வரூபம் எடுத்து பயமுறுத்திக் கொண்டே இருக்கும் என்றும் புரிந்த்து. தாய் அபிராமி தந்தத் தைரியத்தில் தானே இன்று நிம்மதியாக ஊர் திரும்ப முடிந்தது.
வாடகைக்காரின் ஜன்னலை இறக்கி விட்டார் கமலா. அன்றைய நாள் எப்படியிருக்கும் என்று காட்டுவது போல செங்கதிரோன் வானத்தைக் குங்குமத்தில் தோய்த்தெடுக்க செவ்வானம் வரப்போகும் பிரச்சனைகளுக்கு அறிகுறியோ என்று அவருக்குத் தோன்றியது. பிரச்சனை என்றால் இப்போது மகளின் சத்யாவின் வாழ்க்கையில் தான் சின்னச் சின்னபிரச்சனைகள் கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி சச்சரவு. சத்யாவின் கணவனுக்கோ வேலை நிரந்தரமில்லை. எப்போதும் கழுத்துக்குக் கீழ் கத்தித் தொங்கியபடி எப்போது வேலைக்கு ஆபத்து வருமோ என்ற பயம் தான் சண்டைகளுக்குக் காரணம் என்று சொல்லி மகளுக்குப் புரிய வைத்துவிட்டுத்தான் கிளம்பியிருந்தார் கமலா
இருந்தாலும்.. இந்தச் செவ்வானம் அவருக்கு பயத்தைத் தருவது ஏன்? அன்னையின் திருமுகத்தின் திலகமல்லவா அது. அன்னை அபிராமி எங்கும் என்றும் இருக்கிறாள் என்பதன் சாட்சியல்லவா இந்தச் செங்கதிர். மனதில் எழுந்த பயத்தைப் பின்னே தள்ளினார்.
சிவாவையும் மாயாவையும் பற்றியக் கொஞ்சம் கூட அவருக்கு இல்லை. அதுவும் மாயா எப்படிப்பட்டப் பெண்? சத்யாவின் வயது தான் என்றாலும் அவளுக்கு இருக்கும் பொறுப்பும் திறமையும் கவலாவின் கவலைக்குத் துளிகூட இடமில்லை.
ஜெர்மனியிலிருந்து அவனும் இன்று தான் திரும்பி வருகிறான். அவனுடைய பயணமும் சுமுகமாய் இருக்க வேண்டும் ஒரு பெருமூச்சோடு அபிராமி அன்னையை மனதுக்குள் கொண்டு வந்தார். மாயவை சிவாவின் வாழ்வில் கொண்டு வந்ததிற்கு ரொம்ப நன்றி தாயே. மனமுருகி அன்னையின் புன்சிரிப்பை தன் மனக்கண் முன்னால் கொண்டுவந்தார் கமலா.
பயம் என்ற இருட்டுக்கு முன்னால் நன்றிக் கடன் என்ற விளக்கை வைத்தவுடன் மனம் தானாய் சாந்தம் அடைந்தது.
மென்மையாய் முகத்தைத் தழுவிச்சென்ற இளம் காலைக் காற்றை இழுத்துச் சுவாசித்தார் அவர். தூங்காமல் வந்ததால் முணுமுணுத்துக் கொண்டிருந்த தலைவலிக்கு இளம் காலை ஆக்ஸிஜன் இதமாக இருந்தது.
அம்மா தாயே என்ன நடந்தாலும் தைரியத்தை இழக்கமா, பொறுமையா நடக்கிற சக்தியை இன்னைக்கு எனக்குக் கொடும்மா என்று கண்மூடிப் பிராத்தித்தார்.
இன்னும் பத்து நிமிடங்களில் வீடு வந்து விடும். தொழிலை ஆறுமாதம் கவனிக்காமல் சென்று விட்டதால் வாசன் இன்றே கடைக்குச் செல்ல நினைத்திருந்தார். மருமகள் மாயாவும் வேலைக்குக் கிளம்புவாள். மகன் சிவாவும் ஜெர்மனியிலிருந்து இரண்டே நாளில் வந்து விடுவான். வந்தவுடன் இட்லி வடை அவனுக்காகக் காத்திருக்க வேண்டும்.
மாயா சிவாவிற்குத் தேவையானது சரியாகச் செய்து விடுவாள் என்பதால் கமலா கவலைப்படவில்லை. ஆனால் பிள்ளைக்குத் தன் கையால் சமைத்துப் போட வேண்டும் என்று ஆவல் எழுந்தது.
தான் என்ன என்ன செய்ய வேண்டும் என்று மனதுக்குள் பட்டியல் போட்டபடியே கமலா அன்றைய நாளை எதிர் கொள்ளத் தயாரானார். அலுப்போ, களைப்போ அவர் இன்றிலிருந்தே சக்கரமாக சுழல வேண்டும்.
“விமானத்தில் முன்னால் சீட்டிலிருந்தக் கைக் குழந்தை அழுதுகொண்டே இருந்தது தலைவலி மண்டையைப் பிளக்குது. போன வுடனே ஒரு காபி போடு.” வாசன் கமலாவின் முதல் கடமையை நினைவுறுத்தினார் வாசன்.
வண்டி வந்து வாசல் முன்னால் நிற்க, ஆறுமாதமாய் எண்ணேய் இடாத வாசல் கதவு, கீறிச்சிட வீட்டுக்குள் வந்தனர் அந்த மூத்தத் தம்பதியர்.
மருமகள் மாயா ஏன் வாசலுக்கு வரவில்லை? யோசனையுடனே வண்டியை விட்டு இறங்கினார் கமலா.வாடகைக்கார் ஓட்டினர் உதவியுடன் பெட்டிகளை வாசன் வீட்டுக்குள் கொண்டுவர கமலா மாயாவைத் தேடிக் கொண்டு போனார்.
கண்களையும் கால்களையும் உறுத்தியத் தூசிப்படலமும் ஆழ்ந்த அமைதியும் தான் அவரை வீட்டுக்குள் வரவேற்றன. மாயா வீட்டுக்குள் இருப்பதாய்த் தெரியவில்லை.கமலாவிற்கு வயிற்றைக் கலக்கியது.
மாயா எங்கே?
“வீட்டிலேத் தனியா இருக்கவேண்டாமென்று அவங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறாளோ என்னவோ”. வண்டிக்குப் பணம் கொடுத்து விட்டு உள்ளே வந்த வாசன் சொன்னார்.
அப்படின்னாலும், நாம இன்று வருவோமென்றுத் தெரியும் தானே கமலாவின் குரலில் எரிச்சல் கலந்த கவலை.
நீ வருவேனென்று அவ காலங்காத்தாலேயே வந்து காத்து இருக்கணுமா கமலா? வேலையிலிருந்து சாயந்தரமா நேரே இங்கே வருவாளோ என்னவோ/என்றபடி இன்னோரு பெட்டியை எடுக்கப் போனார் வாசன்
ஆமா சிவா வருகிற நாள் என்றால் அவ அம்மா வீட்டிலே இருப்பாளா என்ன? வயசான நம்ம இரண்டு பேரையும் பார்க்க அவ ஏன் துடிக்கணும். சொல்லும் போதே கமலாவின் முகம் புன்னகையில் விரிந்தது. இந்த சின்னஞ்சிறு ஜோடிக் கொஞ்சி குலாவுவதைக் கண்டும் காணாமல் பார்த்திருக்கிறாரே!
நீ முதலில் எனக்கு காபிப் போடு நான் கடைக்குப் போகணும்.என்றபடி பெட்டிகளை உள்ளே வைத்த வாசன் சொல்லிவிட்டு வாசன் குளிக்கச் சென்றார்.
மகனின் அறையிலும் சமையலறையிலும் எட்டிப் பார்த்த கமலாவிற்கு வீடு பல நாட்களாகப் புழங்காமல் இருப்பது புரிந்தது.
மாயா இப்படி பொறுப்பில்லாமா இருக்க மாட்டாளே? அவளிருக்கும் தைரியத்தில் தானே இவர் ஆறுமாதம் அமெரிக்காவில் போய் உட்கார்ந்தது.
பயணக் களைப்போடு கவலையும் சேர்ந்து கொள்ளக் கமலாவின் தலைவலி அதிகமாகியது.
டிங்டிங்ட்டிங் வீட்டின் அழைப்பொலி அழைக்க
மாயாவாக இருக்குமோ?
வேகமாகப் போய் வாசல் கதவைக் கமலா திறக்க வேலைக்காரி பாக்கியம் பால் பையுடன் நின்றிருந்தாள்.
“என்னம்மா பயணம் சௌக்கியமா இருநத்தா? சகதிப் பாப்பா எப்படி இருக்கு? மாப்பிள்ளை எப்படி இருக்கார்? பேரன் என்ன சொல்றான்? “கேட்ட படியே உள்ளே நுழைந்தாள் அவள்.
“ஆ எல்லாரும் நல்லா இருக்காங்க பாக்கியம்.”என்றவர்
உடனே கேட்டார்
“ஏன் பாக்கியம் நாங்க வறோம்ன்னு உனக்குத் தெரியும் தானே மாயாகிட்ட சாவி வாங்கி நீயாவது வீட்டைக் கூட்டிப் பெருக்கித் துடைச்சு வைக்கக் கூடாது. அவளுக்குத்தான் ஆபிஸில் என்ன வேலையோ? மாயா அம்மா வீடு உனக்குத் தெரியும் தானே?”
வாசலைப் பெருக்க விளக்குமாற்றுடன் சென்றுக் கொண்டிருந்த பாக்கியம் நின்றார்
“என்னம்மா சொல்ற மாயாம்மா அம்மாவும் அப்பாவும் ஒரு விபத்தில் இரண்டு மாசத்திற்கு முன்னாலே போயிட்டாங்கன்னு உனக்குத் தெரியாதா? சிவா தம்பி சொல்லலையா?”
“என்னது எப்போ எப்படி? இப்ப மாயா எங்கே இருக்கா?”
“ மாயாவோட அம்மாவுக்கு காலில் எதோ அறுவை சிகிச்சை நடந்தது. எல்லாம் நல்ல படியா முடிஞ்சு,அந்த அம்மாவும் ஐயாவும் ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பி வரும் போது திருப்பத்திலே வந்த லாரி ஒண்ணு தூக்கி காரை அடிச்சிடுச்சு ஸ்பாட்டிலேயே இரண்டுபேரும் அவுட். பேப்பரிலெல்லாம் இரண்டு நாளைக்கு செய்தி வந்தது.”
கால் நடுங்க பக்கத்தில் இருந்த நாற்காலியைப் பிடித்துக் கொண்டார் கமலா.
“மாயா “
அவர் மனம் மருமகளுக்காக அலறியது.