
துணையும் தொழுந்தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங் குசமும்கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே
தலையைத் தூக்க முடியாமல் தலை பாரமாக இருந்த்து மாயாவிற்கு
ஆறுமணிநேரமாக உட்கார்ந்த இட த்திலேயே உட்கார்ந்து கணக்கு வழக்குக்களைப் பார்த்துக் கொண்டிருந்ததால் இரத்த ஓட்டமின்றி கால்கள் கனத்தன. கொஞ்ச நேரம் எனக்கு ஓய்வு கொடேன் என்று அவளது உடல் கெஞ்சியது. ஆனாலும் ஆராய்ந்துக் கொண்டிருக்கும் கணக்கில் ஆழ்ந்திருந்த மாயாவின் மூளை எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளியது. வளர்ந்து வரும் இரண்டு பெரிய கம்பெனிகளின் வரிகளைக் குறைப்பது பற்றியத் திட்டங்களைத் தீட்டி முடிக்கும் நேரத்தில் ஓய்வு என்பது மாயாவால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விஷயம்.
அதைவிட வேலை இல்லாமல் ஒரு நிமிடம் உட்கார்ந்தாலே கண்களில் நீர்க் கட்டிக் கொண்டு குமுறி அழ வேண்டும் என்று மனது பாரமாய் கனத்த்து. தாய் தந்தை மரணம் என்றப் பெரிய அடியைத் தாங்க வலுவைக் கொடுப்பதே இந்த வேலைதான். அதனால் பிடிவாதமாக வேலையைத் தொடர்ந்தாள்.
வான வீதியில் மேகங்கள் தேரோட்டம் நட த்த,குருவிக் கூட்டம் அவை பின்னே ஊர்வலம் போக, என் வழி தனி வழி என்று சூரியன் எதிர்த் திசையில் மேற்கு நோக்கி நகரும் பிற்பகலின் மஞ்சள் நிறம் அவள் அலுவலக அறையின் சன்னல்களில் பிரதிபலித்த்து.எதையும் கவனிக்காது தன் கண்ணாடிக் கூண்டுக்குள் அமர்ந்து தன் வேலையையே அவள் கைவிலங்காக்கிக் கொண்டிருந்தாள் மாயா.
நேரம் ஆக ஆக வயிற்றில் வளர்ந்து வரும் சின்னப் பூவின் அழுத்த்த்தில் சிறுநீரகம் வலித்த து. கண் முன்னால் எண்கள் மீன்களாய் நீந்த ஆரம்பித்தன.
ஒரு குட்டி ரெஸ்ட் எடுத்துக்கோம்மா, கண்ணா அம்மாவின் குரல் காதில் கேட்பது போல ஒரு பிரம்மை.
ஆனால் அம்மா தான் இல்லையே தோளைக் குலுக்கிய படி எழுந்தாள். தான் நடப்பது குழந்தைக்கு வலிக்க்குமோ என்ற பயத்தோடு வயிற்றை உள்ளங்கையில் தாங்கிய படி கழிப்பறையை அவள் நடக்க அவளின் கீழ் வேலை பார்க்கும் மற்ற நான்கு பேரும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தனர். சேலைக்குள் இப்போது பதுங்கியிருக்கும் வயிறு சீக்கிரமே வெளியே எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும். அடுத்த மாதம் இதே நேரம் இவள் சூலுற்றுருக்கிறாள் இவர்கள் எல்லோருக்கும் என்று தெரிந்து விடும் ஒரு வெட்கச்சிரிப்புடன் கண்ணீரை மறைக்க தலை குனிந்து விரைந்தாள்.
கழிப்பறையின் தனிமையில் கண்ணீர் பெருகியது. யாருமில்லாத அநாதைக்கு ஆதரவாக ஒரு சின்ன உயிர் வரப் போகிறது. இந்தக் குழந்தை உருவான அந்த நாளை மாயாவால் மறக்க முடியாது.என்ன ஒரு ஆனந்தமாகத் தொடங்கி எப்படிப் பட்ட அபந்தமாக முடிந்தது.. அவள் வாழ்க்கையில் அன்று தான் மனைவி என்ற அத்தியாயம் முடிந்து போனது. அதோடு போனதுஅதைத் தொடர்ந்து மகள் என்ற பக்கங்களும் கிழித்தெரியப்பட்டன,இனிவரும் நாள்கள் இவளுடைய வாழ்க்கையின் புதிய அத்தியாயம்.தாயில்லாத இவளுக்குத் தாய் என்ற பட்டம்.
அம்மா என்ற அத்தியாயத்தை இவள் மட்டுமே எழுதப்போகிறாள். கண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தால் தைரியம் தான் கெட்டுப் போகும். முகத்தை நீரடித்துக் கழுவிக் கொண்டு தன் அறைக்குச்சென்று வேலைக்குள் ஆழ்ந்தாள்.எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை. கதவு தட்டும் ஒலியில் தலை நிமிந்தாள்.
அவளுக்குக் கீழே வேலை செய்யும் பெண்
மேடம் உங்களைப் பார்க்க உங்க மாமியார் வந்திருக்காங்க
வேலையைப் பாதியில் விட மனமில்லால், “முக்கியமான வேலையா இருக்கேன் அதனால் ஒரு பத்து நிமிஷம் தான் முதலிலேயே சொல்லி உள்ளே அனுப்பு. குடிக்க ஏதாவதும் அனுப்புங்க” என்ற படி கமலாவை சந்திக்கத் தயாரானாள்.
உயிர்த் தோழி சத்யாவைப் பற்றி விஷயம் தெரியும். குட்டிப்பாப்பா குகனைப் பற்றிக் கதை கதையாய்க் கேட்க ஆவலில் துள்ளிய மனதை அடக்கினாள். சத்யா இப்போது சிவாவின் தங்கை மட்டும் தான். அவளின் தோழியாக எண்ணிப் பார்ப்பது அவளுக்குத் தான் வேதனையைத் தேடித் தரும்.
அமெரிக்காவிலிருந்து இன்றுக் காலை தான் வந்திருப்பார்கள். வந்தவுடன் இவளைத் தேடி வரவேண்டுமானால்
எந்தளவிற்கு இவர்களுக்கு விஷயம் தெரியும்? என்னென்ன சொல்லலாம் சொல்ல்லாமா வேண்டாமா என்று மனம் குழம்பியது. . முதலில் அவர்கள் பேசட்டும். ஆனால் இவர்கள் முன் மனம் உடைந்து அழுது மட்டும் விடக் கூடாது என்று முடிவெடுத்தபடி மாயா தன் மேஜைக் காகிதங்களை ஒதுக்க, கதவை மெல்லத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் கமலா.
அயர்ந்த கண்கள் கருவளையத்துக்குள் உள்ளடங்கி , எப்போதும் குழி விழச் சிரித்திருக்கும் கன்னங்கள் ஒடுங்கி இருந்த மாயாவைப் பார்த்ததும் இது தன் மருமகள் தானா என்றிருந்த்து கமலாவிற்கு
“மாயாம்மா என்னடா ஒரு வார்த்தை சொல்ல்லை தெரிஞ்ச உடனே ஓடி வந்திருப்பேனே கண்ணம்மா”, பாசத்துடன் மருமகளிடம் கையை நீட்டிக் கொண்டு வந்தார்.
மாயா பின்னால் நகர்ந்து தன் மேஜைக்குப் பின்னால் பதுங்கினாள். இந்தப் பாசத்தையும் அன்பையும் ஏற்றுக் கொள்ளும் இடத்தில் இப்போது அவள் இல்லை. நீ எனக்கு மனைவி இல்லை என்று சிவாவே சொல்லி விட்ட பிறகு இந்த அன்பான கைகளுக்குள் அடங்கி இதம் தேடுவது தவறு
மருமகளின் உடல் அசைவுகள் எதையோ உறுத்த அருகிலிருந்த நாற்காலியில் தளர்வாக உட்கார்ந்தார் கமலா
மெளனமாகவே இருவரும் உட்கார்ந்திருக்க கமலா குடிக்க காபியும் மாயாவிற்குத் தண்ணீரும் கொண்டு வந்துக் கொடுத்துவிட்டுப் போனான் பணியாள்.
மகள் சத்யாவைப் பற்றிக் கூட ஒன்றும் கேட்காமல் உட்கார்ந்திருக்கும் மருமகளை ஆச்சிரியமாகப் பார்த்தார். இருவரும் உயிர்த் தோழிகள். மாயா சிவாவை மணந்து கொண்டதே சத்யாவை விட்டுப் பிரியாமல் இருக்க என்று தோழிகள் இருவரும் சேர்ந்துச் சொல்லிச் சிரிப்பார்கள்.தாய் தந்தையின் மரணம் ஆளை அப்படியே மாற்றிவிட்டதே
கவலையோடுத் தன்னையேப் பார்த்துக் கொண்டிருந்தவரிடம் எல்லாவற்றையும் கொட்டி அழ வேண்டும் போல இருந்த்து மாயாவிற்கு. ஆனாலும் பிடிவாதமாக உதட்டை அழுத்திக் கொண்டு வார்த்தைகளை உள்ளடக்கினாள் மாயா.
“உன்னைப் பத்தி சத்யாவிற்கு ரொம்பப் பெருமை. நிமிஷத்திற்கு உன்னைப் பத்தியே தான் பெருமையா பேசிட்டு இருப்பா. உனக்கு இப்படின்னு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவா. நீ சொல்லி இருந்தா எங்களோட அவளுமே சேர்ந்து புறப்பட்டு வந்திருப்பா
மாயா சலனமில்லாமல் உட்கார்ந்திருந்தாள்.
“நீ அதைப் புரிஞ்கிட்டுத் தான் எங்க கிட்ட விஷயத்தைச் சொல்லவே இல்லைன்னு நினைக்கிறேன். சிவாவுமே ஒண்ணும் சொல்ல்லை ரொம்ப சாரிடா மாயா”
மெளனமே பதிலாக வந்த்து.
குழம்பினார் கமலா.
மாயா இருக்கும் இட த்தில் எப்போதுமே கலகலப்பிற்குக் குறைவு இருக்காது. ஒருவர் பேசி முடிக்கும் முன் தன் பேச்சை ஆரம்பித்து விடுவாள். அவள் கைகளை ஆட்டி தலை சாய்த்து பேசுவதை பார்ப்பதற்கே சிவாவும் வாசனும் அவளிடம் வம்படிப்பார்கள். அப்படிப்பட்டவள் இன்று பேசா மடந்தையாக இவள் இருக்க வேண்டுமென்றால்
எங்கேயே ஏதோத் தப்பு நடந்திருக்கிறது என்று உள்ளுணர்வு உணர்த்தியது. தப்பு சிவாவின் மேலிருக்குமோ என்று தோன்றியது. ம்களின் தோழியாக தான் பார்த்து வளர்ந்தவளிடம் குறை கண்டு பிடிக்க கமலாவால் முடியவில்லை. ஆனால் மகன் சிவாவின் மூர்க்கத் தனமான கோபம் அவருக்குத் தெரியும்.
“முக்கியமான வேலையாய் இருக்கிறாய் என்று நினைக்கிறேன். நாங்க திரும்பி வந்துட்டோம். சிவாவும் வந்து விடுவான். வீட்டுக்கு வா என்று சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்” மாயா அவரேத் தொடர்ந்தார்.சிவா திரும்பி வரும் போது நீ இல்லைன்னா ரொம்ப வருத்தப்படுவான் என்று நினைக்கிறேன்.
மாயா பதிலளிக்கவில்லை ஆனால் மறுப்பாய்த் தன் தலையை அசைத்தாள். கேள்வியாய் அவளைக் கமலா பார்க்க உதட்டைக் கடித்தபடி அவர் முகத்தையும் ஆறிப் போஒய்க் கொண்டிருந்த காபியையும் மாறி மாறிப் பார்த்தாள்.
கமலா நாற்காலியிலிருந்து எழுந்தார்.
“ இப்ப இருக்கிற மனநிலையில் உனக்கு யாருமே இல்லைன்னு தோணும் நாம ஒரு அநாதைன்னு நீ நினைக்கிறே. ஆனா உண்மை அது இல்லை.”
“உனக்கு நாங்க இருக்கோம்” . “அதுக்கும் மேலே உன் தாய் தினமும் சொன்ன நவ துர்கா ரக்க்ஷக மந்திரம் உன்னை கண்டிப்பாய்க் காப்பாற்றும்”
சொன்னவர் மெள்ள அறையை விட்டு வெளியேறினார்.