அபிராமி 3

Abirami_Mawikipedia

அறிந்தேன்,எவரும் அறியா மறையை;அறிந்து கொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே; திருவே!-வெருவிப்
பிறிந்தேன், நின்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே!

“ங்கா,ங்கா,” என்ற காதில் நிறுத்தாமல் ஒலித்த அழுகையில் கண்விழித்தாள் சத்யா. பக்கத்தில் குழந்தை குகன் பசியில் அழுது கொண்டிருந்தான். அடித்துப் பிடித்து எழுந்தாள் அவள் மணி பதினொன்று என்றது கடிகாரம். இவ்வளவு நேரமாகவாத் தூங்கி விட்டாள். அடித்துப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டு இருக்கும் குழந்தையை ஓடிச் சென்று தொட்டிலிருந்து தூக்கி பசியாற்றினாள்.
எப்படி இப்படித் தூங்கினாள்? அதுவும் குழந்தை அழுவது கூத் தெரியாமல் அவமானமாக இருந்தது சத்யாவிற்கு.
“ரொம்ப நேரம் அழுதுயாக்குட்டி ரொம்பச் சாரிடா ராஜா” என்றபடி மகனைத் தழுவிக் கொடுத்தவள், தன்னைச் சுற்றியும் பார்த்தாள். அம்மா சென்று இரண்டு நாட்களாகச் சுத்தப்படுத்தாது விட்டிருந்த
படுக்கை அறை குமட்டிக் கொண்டு வந்தது. பாப்பாவோடு வீட்டுக்கு வந்த நாளிலிருந்து எல்லா வேலையும் அம்மாவே பார்த்துக் கொண்டார். இரவில் குழந்தை அழுத போது கூடக் கமலா உடனே வந்து கூட மாட உதவி செய்வார். குழந்தை பசியாறும் போது இவளுக்கும் மிதமான சூட்டில் பால் கொண்டு கொடுப்பார். அம்மா கிளம்பிச் சென்ற இரண்டு நாட்களில் அவள் இல்லாமல் குழந்தையையும் பார்த்துக் கொண்டு, வீட்டையும் பார்த்துக் கொள்வது உடம்பு களைத்து விட்டது போல. அது தான் தூங்கி விட்டாள் தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள் சத்யா
“உன் அம்மா ரொம்பப் பெரிய சோம்பேறி சின்னக் குட்டி”
என்று மகனின் உள்ளங்காலைத் தடவிய படி சின்னப் பிஞ்சுடன் பேச, பசியாறிக் கொண்டிருந்த மகன் தாயின் முகத்தைப் பார்த்து பூவாய்ச் சிரித்தான். மகனுடன் கொஞ்சிக் கொஞ்சிக் கொண்டே சத்யாவிற்கும் வயிற்றும் பசிக்க ஆரம்பித்த்த்து. மகனின் வேலை முடியட்டும் என்று பசியைப் பொறுத்துக் கொண்டாள் சத்யா.
தாய்க் கையிலிருக்கும் வரை விளையாடுவது தான் தன்னுடிய முக்கியமான வேலை என்று நினைத்த குட்டிக் குகன் தாயின் மார்பில் முட்டுவதும் அவள் முகத்தைப் பார்த்துச் சிரிப்பதுமாகப் பொழுதைக் கழித்தான்.
மகன் இப்போதைக்குப் பசியாறப் போவது இல்லை என்று தோன்ற குழந்தையைப் படுக்கையில் விட்டு விட்டு கழிப்பறைக்கு ஓடினாள். மகன் மீண்டும் அலறும் முன் தன் வேலையைப் பார்க்க வேண்டுமே. தாயின் அணைப்பின் கதகதப்புக் குறையவும் மீண்டும் அழ ஆரம்பித்தான் குகன்.
அவனுடைய அம்மாவை அப்படித்தானே அவனால் அழைக்க முடியும்.
அவதி, அவதியாய் தன் வேலையை முடித்து வந்து குழந்தையைத் தூக்கியவள் அவனை ஒரு கையில் வைத்துக் கொண்டே மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.
மதியம் இரண்டு மணி அளவில் மனமும் உடலும் சுருண்டு போக மீண்டும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு படுக்கை அறைக்கு வந்தாள். குழந்தைக்கு வயிற்றுப் பசி அடங்கவில்லையோ என்னவோ அவன் கையில் இருக்கும் வரை அமைதியாய்த் தூங்கினான். அவள் கையை விட்டு இறக்கினால் அழுதான்.
தன் மேலேயே சத்யாவிற்குக் கோபம் வந்தது. ஒரு சின்னக் குழந்தையைச் சமாதானப்படுத்த முடியவில்லையா இவளுக்கு
ஆனால் கோபத்தை தன் மேலேயே எப்படிக்காட்டுவது?
கணவன் சந்திர சேகரை அழைத்தாள்
இரண்டு முறை முயன்றும் அவன் கை பேசியை எடுக்க வில்லை.
ஆத்திரம் வந்தது சத்யாவிற்கு.
குழந்தையை மடியில் கிடத்தியபடியே கணவனுக்குத் தன்னை உடனே அழைக்கும் படி மின்னஞ்சல் அனுப்பினாள்.
கணவன் உடனேக் அவளை அழைக்கவில்லை என்றதும் அவள் ஆத்திரம் அடக்க முடியாமல் வளர்ந்தது.
அவள் ஆத்திரம் தெரியாமல் கைக் குழந்தையும் அழுது அழிச்சாட்டியம் பண்ணியது.
ஆத்திரமும் கோபமும் நேரமாக நேரமாக அழுகையாக மாறியது.
யாராவது ஒரு இருபது நிமிடம் குழந்தையைப் பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் அவள் தோழிகள் இருவரும் வெளியே சுற்றப் போயிருப்பார்கள். சத்யாவிற்குக் குழந்தைப் பிறந்தவுடன் அவர்கள் அவளை அவ்வளவாகச் சேர்ப்பதில்லை. அம்மா இருக்கும் போது அம்மாவின் சமையல் புகழ்ந்து பாடிச் சாப்பிட வந்து விடுவார்கள் ஆனால் இரண்டு நாட்களாக இந்தப் பக்கமே காணோம். தோழிகள் மேலே பொறாமையாக இருநத்து சத்யாவிற்கு. எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறார்கள் அவர்கள். இவள் மட்டும் தான் இங்கே தனியாக் கைக் குழந்தையுடன் அல்லாடிக் கொண்டிருக்கிறாள். குழந்தை என்று வருவதற்கு முன்னால் கேக் செய்யும் வகுப்பு, பல வித வர்ணங்கள் பற்றிய வகுப்புக்கள் , வீட்டு அலங்கார கைவேலை வகுப்பு என்று பல இடங்களில் தோழிகளுடன்சுற்றிய சத்யா இப்போது தனியாக ஒரு பெரிய பொறுப்பைச் சரியாகச் செய்ய முடியாமல் திண்டாடினாள்.

துணைக்கு யாரும் இல்லாமல் கணவனை மீண்டும் மீண்டும் கைப் பேசியில் கூப்பிட்டுத் தொந்தரவு செய்தாள்
அவளுடைய தொல்லைத் தாங்காமல் சந்திரசேகர் எடுத்தவுடனே எரிந்து விழுந்தான்
“மனுஷனை வேலை பார்க்க விட மாட்டியா?”
இல்லை சந்தர் கொஞ்சம்யாருக்கிட்டையாவது பேசணும் போலச் சத்யா சொல்ல
முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன் ஐந்து நிமிஷத்திற்கு ஒரு தடவை உன் போன் சரியான நச்சு
போனை எடுக்கலைன்னா நான் பிஸியா இருப்பேன்ண்னுத் தெரியாதா” அவன் கத்த
ஆத்திரமாய் இருந்த சத்யாவும் கத்த ஆரம்பித்தாள்
“நீங்க மட்டும் தான் வேலைப் பார்க்கிறீங்களா?
நானும் இந்தக் குட்டியோட போராடிட்டு இருக்கேன். இன்னும் குளிக்க் கூட இல்லை”.
“சத்யா நீ குளிக்காத து பெரிய பிரச்சனையா? இங்கே தலை மேல கத்தித் தொங்குது விவரம் தெரியாமா சின்னப் பிள்ளையாட்டம்” அலுத்துக் கொண்டான் சந்திர சேகர்.
“ஆமா நான் சின்னப் பிள்ளை தான் வாங்க நீங்களே வந்து உங்க பையனை நல்லாப் பாத்துக்கோங்க ஆத்திரத்தோடு அழுகையும் கலந்தது.”
“சை” என்று வெறுப்புடன் போனை வைத்து விட்டான் சந்திர சேகர்.

அழுது கொண்டே படுத்தாள் சத்யா. குழந்தையை அணைத்துக் கொண்டு படுத்தவள் மனம் தாயை நாடியது.அவர் சொல்லி விட்டுப் போன புத்தி மதிகளும் மனதில் நின்றது.
“ சத்யா அபிராமி முன்னாலே விளக்கு ஏத்தி வைச்சா மட்டும் பத்தாது அவளைப் பெருமைப் படுத்துற மக்ளா நீ நடந்துக்க முயற்சி பண்ணனும். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் எரிச்சல் படறதும் பொறுமை இழக்கிறதும் நல்லது இல்லை. உன் கணவனுக்கு நீ தான் நம்பிக்கைக் கொடுக்கணும் உன் சந்தோஷத்திற்கு நீ அவரை எதிர்பார்க்காதே “
என்று அவளை மடியில் போட்டுக் கொண்டு தாய் பிரசவத்திற்கு முன்னால் பேசியது நினைவுக்கு வந்த்து. அம்மாவிடம் பேசினால் மனதில் கொஞ்சம் தெம்பு வரும் என்று தோன்றியது. அம்மா இப்போது மாயாவிடம் தன் அமெரிக்கக் கதைகளைச் சொல்லிக் கொண்டு இருப்பார்.

மனம் மாயாவையும் தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்தது.
இதே மாயாவாய் இருந்தால் எல்லாவற்றையும் சுலபமாகச் சமாளித்து இருப்பாள். அவர்கள் இருவரில் அவள் தான் புத்திசாலி . கணக்கில் சத்யா முதல் வகுப்பில் மதிப்பெண் வாங்கியதற்குக்கே காரணம் மாயா தானெ.
செய்யும் எதையும் சரியாகச் செய்ய ஆசைப் படுவாள். எந்தப் பிரச்சனையையும் எளிதாகச் சிரித்துச் சிரித்தே சமாளிப்பாள்.
தனக்குத் திருமணமாகி அமெரிக்கா போய் விட்டால், தங்கள் நட்பும் முடிந்து விட்டதே என்று சத்யா ரொம்பக் கவலைப் பட்ட போது நான் மிஸ ஸ் சிவாவாக மாறிவிட்டால் நம் நட்பு வலுப்படத் தானே செய்யும் என்று குறும்பாக உடனே விடை சொன்னவள் மாயா
தோழியின் குறும்பை ரசித்தவள் காரியத்தை நிறைவேற்றிய விதத்தை நினைத்தவுடன்
சத்யாவிற்கு முகமும் மனமும் மலர்ந்தது. அம்மா கூட இருந்த வரை அம்மாவிடம் கொஞ்ச மட்டுமே சத்யாவிற்கு நினைவிருந்தது.அம்மா வந்த புதிதில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இந்தியாவிற்குப் போனில் பேசினார்கள் தான். அப்புறம் அண்ணன் சிவா வேலை விஷயமாகச் சிலகாலம் ஜெர்மனி செல்லவும் முதலில் அங்கே தனியாக இருக்கும் மகனிடம் பேசத் தான் அம்மா ஆசைப்பட்டார்.
மாயாவும் அவளை மின்னஞ்சலில் கூடத் தொடர்பு செய்ய முயலவில்லை. சரி அம்மா அப்பாவும் அமெரிக்கா வந்ததும் அம்மா வீட்டில் மாயாவும் கொஞ்சிக் கொண்டு இருப்பாள் என்று நினைத்தாள் மாயா.
இங்கே சந்திரனுடன் இவள்அடிக்கடி சண்டிபோட அம்மா புத்தி மதி சொல்ல அதை மாயாவிற்கு எழுத சத்யாவிற்குத் துணிவில்லை. மாயாவும் புத்தி சொல்ல வந்து விட்டால் அவளுக்குத் தாங்காது
இப்போது அவளைக் கூப்பிட்டுப் பேசினால் நன்றாக இருக்கும் எனத் தோன்ற தன் வீட்டை அழைத்தாள் சத்யா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP to LinkedIn Auto Publish Powered By : XYZScripts.com