ஒரே நாள் உனை நான் 1

ஒரே-நாள்1“சிவா சிவா என்னோடு கூட வந்து நில்”.

 

“நீ தான் இப்போது நம்ம ரயில் என்ஞ்சினாம், பிரியா,ஜான்சன்,மணி எல்லோரும் உன்னைத் தொடர்ந்து வரும் ரயில் பெட்டிகளாம்”.

என்ற படி அந்தத் துணிக்கயிற்றை அந்த ஆறு வயது சிறுவன் முன் நீட்டினாள் உமா. அவளையே பார்த்துக் கொண்டிருந்த குழந்தைப் பிரியா காலை உதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். நான்கு அடிக்கொரு கனமான முடிச்சுக் கொண்ட அந்தக் கயிற்றைச் சுருட்டி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்ட உமா தன் உதவிக்காக அமர்த்திய ஆயாவிற்குக் கண் காட்டினாள்.

 

அவளது குறிப்பை புரிந்து கொண்ட ஆயா அன்னம்மாள் வேகமாக வந்து உமாவின் பக்கத்தில் நின்று கொண்டு தன் கையோடு வைத்திருந்த சிரித்த முகம் கொண்ட அட்டையைக் குழந்தை பிரியா பார்க்கும் படியாகக் காட்டி. “பிரியா குட்டி சிரிப்பாளாம்” என்று சிறுமி அழுகையை நிறுத்தும் வரை பொறுமையோடு கூறினாள்.

 

அங்கு நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போலக் குழந்தை ஜான்சன் கைகளை விரித்து “றும்றும்” என்ற படி தானே விமானமாகி அறையைச் சுற்றி ஓடிக் கொண்டு இருந்தான். மணி உமாவின் துப்பட்டாவை விரலால் சுருட்டிய படி அவள் மேல் சாய்ந்திருந்தான். குழந்தை சிவா தரையில் குப்புற படுத்த படி கன்னத்தில் கையால் கன்னத்தைத் தாங்கியடி ஓடிக் கொண்டிருந்த ஜான்சனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்

 

உமா ஆட்டிசம் குழந்தைகளுக்கான ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கி ஆறு மாதங்களாக நடத்தி வருகிறாள். அதில் சேர்ந்துள்ள குழந்தைகளை

 

வாரம் ஒரு முறை அவள் வெளியே அழைத்துச் செல்வாள். இன்று அவர்களை ஊனமுற்றோர் தடகளப் போட்டி ஒன்றைப் பார்க்க அழைத்துச் செல்லத் திட்டம்.

 

தன்னுடைய தனி உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையையும் ஒரு சராசரி. வாழ்க்கைக்குப் பழக்க நேரமும் பொறுமையும் வேண்டும்.

 

நல்ல வேளை போட்டி நடக்கும் திடல் அருகிலேயே உள்ளது.

 

தூணில் கயிற்றின் ஒவ்வொரு முடிச்சையும் ஒரு குழந்தை பற்றிக் கொள்ள உமா முன்னாலும் அன்னம்மா ஆயா பின்னால் நடக்கக் குழந்தைகள் ரயில் வண்டியாய் ஓடித் திடலை அடைந்து விடலாம்.

 

ஒரு வழியாகப் பிரியாவின் அழுகை அடங்க, ஆயா போய்ப் படுத்துக் கிடந்த சிவாவைத் தூக்கி வந்து வரிசையில் நிற்க வைக்க உமா, கையிலிருந்த கயிற்றின் முதல் முடிச்சைச் சிவாவின் கையைப் பிடித்து அவன் கையில் வைத்தாள். மலங்க மலங்க விழித்த அவனிடம் “நீ தான் இரயில் என்ஜின்” என்று சொல்லி அவனின் பிஞ்சு விரல்களைப் பருமனான முடிச்சைச் சுற்றி மூடினாள். “பத்திரமாக. பிடிச்சுக்கோ” என்று விட்டு மணி பிரியா என்று வரிசையில் நிற்க வைக்க அதற்குள் ஆயா ஜான்சன் என்ற குட்டி விமானத்தைச் சிங்கார இரயிலின் கடைசிப் பெட்டியாக மாற்றி விட்டு அவனுக்குஒ பின்னால் நின்று கொண்டு அவன் தோள் மேல் கையை வைத்து அவன் வரிசையை விட்டு ஓட முடியாமல் தடுத்துக் கொண்டாள். சிறுவன் மணி

 

“சூச்சூ ” எனறு இரயிலின் ஒலி எழுப்ப அந்த மழலைகளின் வண்டி திடலை நோக்கிக் கிளம்பியது.

ஒரே-நாள்1_1

 

 

திடல் காலியாக இருக்க முன் வரிசையில் குழந்தைகளை உட்கார வைத்தாள்

உமா.

போட்டித் தொடங்கி விட்டால் குழந்தைகள் ஆர்வமாய்ப் பார்ப்பார்கள். அதுவும் பத்து பதினைந்து நிமிடங்கள் தான் அவர்களால் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்க முடியும். அதுவும் இன்று ஊனமுற்றவர்களுக்கான ஒரு போட்டி குழந்தைகள் எப்படி இந்தப் புதுஅனுபவத்தை உள்வாங்கிக் கொள்கிறார்கள் என உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் அவள்

 

 

கால் ஊனமுற்றவர்களுக்கான நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தை அறிவித்துக் கொண்டி இருந்தார்கள்ஆறு பேர் சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு போட்டி ஆரம்பிக்கக் காத்து இருந்தார்கள்.

 

ஒரே நாள் உனை நான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP to LinkedIn Auto Publish Powered By : XYZScripts.com