தன் சக்கர நாற்காலியை விடாப்பிடியாகத் தள்ளி வரும் அன்னையின் கையை தள்ளி விட்டபடி தனக்கு இணையாக வரிசையில் இருக்கும் ஓட்டப் பந்தயக் காரர்களை நோட்டமிட்டான் ஆதி. வரிசையில் இருப்பவர்களிலேயே இவன் தான் வயதானவன். எல்லாம் இந்த அம்மாவால் வந்தது.
இவனை கைக் குழந்தையாக நடத்தாவிட்டால் அவளுக்குத் தூக்கம் வராது. இந்தப் போட்டியில் சேர வேண்டும் என்று இவன் ஆசைப்படவில்லையே. முப்பது வயது ஆண்மகனுக்கு தனக்கு எது தேவை ஏது தேவையில்லை என்ற சுதந்திரம் இல்லையா என்ன?
திரும்பி தூரத்தில் இருந்த தாயை முறைத்தான். அவளின் பார்வையோ வானத்தில் பறக்காத பறவையைத் தேடிக் கொண்டு இருந்தது.
கோபமாகத் தலைக் குனிந்தான். கைகள் தானாக அவனது வலது காலை நீவி விட்டன. இந்தக் கால்கள் வேலை செய்த வரை அவனுக்கு ஒரு பறவையின் சுதந்திரம் தான். அன்னையின் பார்வையும் அவன் மேலேயே இருக்கும் ஆனால் இப்போது!….
கண் முன்னால் பச்சைக் கொடி ஆடியது. கைகள் தானாக சக்கரத்தைத் தள்ள ஆரம்பித்தது. மூளையோ வேறு வேலை செய்தது.
கண் ஓரத்தில் ஆடிய பச்சை நிற அட்டை அவனை உஷார் படுத்தியது. தன் காலை ஓடி வந்த பந்தை லாவகமாக தன் வளைதடிக்குள் சிறை படுத்தி மட்டையை முன்னும் பின்னுமாக திருப்பி பந்தை இடமும் வலமுமாகத் தள்ள ஆரம்பித்தான். காந்தத் துண்டில் இணைந்த ஊசியாய் பந்தோடு ஒட்டி அவனுடைய வளை தடை மட்டை நகர அதை ஓட்டியபடி அவன் மட்டையின் பின்னால் ஓடினான். வலது கை மட்டையின் கீழ் பாகத்தின் அச்சாணியாக இறுக்கிப் பிடித்து இருக்க அவன் இடது கை பந்தை மெல்ல மெல்லத் தட்டி முன்னே நகர்த்தியது. வலது பக்கமாக தன்னைத் தடுக்க வந்தவனின் மட்டையை லாகவமாகத் தாண்டின அவன் கால்கள் இதோ ஆட்டத்தின் குறியிலக்கு எல்லைக்குள் வந்து விட்டான். பந்தைத் தட்டி பூமியில் இருந்து எழுப்பினான். அது எதிராளியின் மட்டையின் வளைவில் இருந்து தப்பியது. ஓடிக் கொண்டே இன்னும் ஒரு முறை மட்டையால் அடித்து உயர்த்தி குறியிலக்கு எல்லைஅயை காத்து நின்ற விளையாட்டு வீரனின் தோளைத் தாண்டி அடித்தான்.
பந்து பட்டு கூடையின் வலை ஆட அவம் மட்டையை உயர்த்திய படியே பின் திரும்பி ஓடினான். அரங்கத்தின் கரவொலி அவனை உற்சாகப்படுத்தியது
ஆனால் கரவோலியில் என்ன ஒரு வித்யாசம்
அவன் தன் நிலைக்கு வந்தான். பந்தய களத்தில் அவனது சக்கர வண்டி மூன்றாவது இடத்தில் இருக்கச் சுற்றி இருந்த சிறு கூட்டம் போட்டியாளர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தது.
ஆதி இருப்பது
சர்வதேச வளைதடி பந்தாட்ட விளையாட்டு அரங்கு இல்லை இது சென்னையில் நடக்கும் ஊனமுற்றோர் ஓட்டப்பந்தயம்.
உண்மை உறைக்க அவன் மூளை முரண்டு பிடித்தது. வேலை செய்யாத காலின் ஆசைக்கு ஈடு கொடுக்க அவன் கைகள் முயற்சி செய்தன. கைக்கு உதவுவது போல அவன் முதுகுத் தானாக முன்னால் வளைந்து கொடுக்க விளையாடவே மறுத்தது மனசு. உடல் உறுப்பிற்கும் மனதுக்கும் மாட்டிக் கொண்டு மூளை ஸதம்பித்தது. கைகள் தானாக வேலை செய்ய வேக வேகமாக அவனுடைய வண்டி முன்னேறியது தடகளபோட்டியின் இறுதிக் கோட்டை அவன் தாண்டும் போது போட்டியில் இரண்டாவது இடத்தை அடைந்து இருந்தான் ஆதி
எல்லைக் கோட்டை வேகமாகத் தாண்டி நான்கு ஐந்து அடிகள் அதே வேகத்துடன் சென்று பின் மெதுவாகி வண்டியை ஒரு சுற்று சுற்றி நிறுத்தினான்.
அவனைத் தேடி ஓடிவந்து சிலர் தோளைத் தட்டினர் யாரையும் பார்க்க பிடிக்காமல் முதுகை வளைத்து முகத்தை முழங்காலில் புதைத்தான். அவனை யாரோ முதுகில் தட்டி தோளை உயர்த்தினார்கள். அவன் கழுத்தில் இரண்டாவது பரிசுக்கான பதக்கத்தை போட்டார்கள்.
பதக்கம் கழுத்தில் விழுந்த மறுநொடி விருட்டெனெ எழுந்தான் ஆதி அவனது வலது கரம் பதக்கம் அணிவித்தவரை ஒரு புறம் வேகமாகத் தள்ளியது
எழுந்த வேகத்தில் நொண்டிக் கொண்டே சென்றவன் கீழே விழுந்து கழுத்தில் இருந்த பதக்கத்தைத் தூக்கி இருந்தான்.சுற்றி இருப்பவர்கள் திகைத்து நிற்க நிலத்தில் கையால் குத்திக் கொண்டே “ஓ ஓ” என்று கதறிக் கொண்டே கத்தினான் ஆதி.
அவனுடைய முதுகு பக்கத்திலிருந்து அவனுடைய தாய் மங்கையும் முன்னால் ஒரு சிறு குழந்தையும் ஓடி வந்தனர்.