நாம் மனிதனா? குரங்கா?

நாம் மனிதனா? குரங்கா?

நம்மை நாமே அழிக்கிறோம்!

மனிதன் என்ற குரங்கு கையில் பூமி

டெல்லியில் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கும், இயற்கை சூழலுக்கும் நடுவே நடுவே நடக்கும் விளையாட்டு இன்று முதல் தொடங்கி உள்ளது. ஒற்றைப் பதிவு எண்ணை கொண்ட வண்டிகள் ஒற்றை எண் கொண்ட தேதிகளிலும் இரட்டை பதிவு எண்களைக் கொண்ட வண்டிகளும் சாலைகளில் ஓட வேண்டும் இந்தச் சோதனை ஓட்டம் பதினைந்து நாட்களுக்கு மட்டும்.
இந்த விதிகளுக்குச் சில விலக்குகளும் உண்டு, பெண்கள் எந்த வண்டியையும் ஓட்டலாம். ஆனால் அவர்கள் வண்டியில் பிரயாணம் செய்பவர்கள் குழந்தைகளாக வோ அல்லது பெண்களாகவோ இருக்க வேண்டும்.
இரு சக்கர வாகனங்களுக்கு எந்தத் தடைவிதிப்பும் இல்லை. அரசு வாகனங்களும் செல்லலாம். முக்கிய அரசு ஊழியர்களான குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர், பிரதமர், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி, மாநில ஆளுநர்கள். துணை ஆளுநர்கள், மக்களவை,மாநில அவை தலைவர்கள் துணைத் தலைவர்கள் ஆகியோர் இந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. இந்த விதியைக் கடைப்பிடிக்கும் காலக் கட்டத்தில் சூழ்நிலையில் உள்ள மாசு ஒரு நாலுக்கு10% குறைந்து காணப்படுவதாக நம்பப்படுகிறது.. இது வரவேற்கத் தக்க ஒரு நல்ல முயற்சியே! ஆனால் பொது மக்கள்
இந்தப் பதினைந்து நாள் நடவடிக்கையைத் தங்கள் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுவார்களா?

மனிதன் என்ற குரங்கு கையில் பூமி

மனிதன் என்ற குரங்கு கையில் பூமி

இல்லை இப்படிப்பட்ட விதிமுறைக்கு அவர்கள் தங்களை ஆளாக்கிக் கொள்ள வேண்டுமா என்பது கேள்வி. சுற்றுச்சூழல் தூய்மையைக் கருதி அரசு எடுத்து இருக்கும் இந்த முயற்சிக்கு பதினைந்து நாட்கள் கழித்தும் பொது மக்களின் பேராதரவு வேண்டும்
பொது மக்கள் விதியை மனம் உவந்து பின்பற்ற வேண்டும்
லஞ்சம் கொடுத்து அபராதம் கட்டுவதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்யக் கூடாது. சலுகை அளிக்கப் பட்ட பெண்களும் அரசு ஊழியர்களும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் தாங்களாக வே முன் வந்து இந்த விதியை நாள் தோறும் பின்பற்றி நம்முடைய சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும்.
சிறுவயதில் ஒரு கதை சொல்லுவார்கள்.
பஞ்ச காலத்தில் உதவ அரசன் ஒரு பெரிய பானையை அரண்மனையின் முன் வைத்து வீட்டுக்கு ஒருவர் இதில் பாலை ஊற்றுங்கள் என்று கட்டளை இட்டானாம். ஒருவன் நினைத்தானாம் எல்லோரும் பாலைத் தான் ஊற்றப் போகிறார்கள் நான் மட்டும் தண்ணீரை ஊற்றினால் அரசனுக்குத் தெரியவா போகிறது? என்று நினைத்து தன் பங்கிற்கு நீரை ஊற்றினானாம். அன்று இரவு அரசன் அந்தப் பெரிய பானையைப் பார்த்த போது அந்தப் பானை முழுவதும் நீர் நிறைந்து இருந்ததாம்.. அந்தப் பானையின் நிலை தான் இன்று நம் பூமிக்கும்.
தனி ஒருவன் நான் செய்வதால் சுற்றுச்சூழல் கெடப்போகிறதா என்று எண்ணி உலகம் முழுக்க உள்ள மக்கள் ஒவ்வோருவரும் அணுஅணுவாய் இன்று இயற்கையைச் சிதைக்கக் காரணமாய் இருந்திருக்கிறோம். இனியாவது நாம் வாழும் பூமி, நாம் வாழும் சூழல் என்று ஒவ்வோரு தனி மனிதனும் அக்கரை எடுத்துக் கொண்டால் ஒழிய நம் பூமி பிழைக்காது.

டெல்லியில் சுற்றுச் சூழலைக்காக்க எடுத்து இருக்கும் முயற்சி போல ஒவ்வோரு வீட்டிலும் நடக்குமா? இல்லை அடுத்த வருடம் அரசு ஏதாவது புதிய உத்தியைக் கண்டுபிடித்து நம்மிடையே திணிக்க வேண்டுமா?
இராமன் ஆயுதம் இழந்து நின்ற இராவணனுக்குச் சொன்னது போல நாம் இயற்கையை நோக்கி”இன்று போய் நாளை வா” என்று சொல்ல முடியுமா?
இயற்கையின் கொடுமைகளிலிருந்து தன்னைக் காத்துக் கோள்ள, தன் வாழ்க்கையை வசதி செய்து கொள்ள மனிதனுக்கு எல்லா வித உரிமையும் டகுதியும் உள்ளது.

ஆனால் அந்த உரிமைக்கும் தகுதிக்கும் நாம் கொடுத்திருக்கும் விலை
நம் பூமியை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டு இருக்கிறோம். அதோடு நாமே நம்முடைய அழிவையும் தேடிக் கொண்டு இருக்கிறோம்.
குரங்கு கையில் மாட்டிக் கொண்ட பூமாலையைப் போல மனிதர்களான நம் கையில் மாட்டிக் கொண்டு பூமி கதி கலங்கி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *