இலந்தை இராமசாமி
உயிர் வாழும் புவி முழுதும் வாழும் மொழியாம் தமிழ் மொழியின் ஒரு பெரிய சிறப்பு, தன்னைக் காலத்துக்கு ஏற்ப மாற்றி,பலரின் கற்பனைக் கருவாகித் தன்னைத் தானே மீண்டும் மீண்டும் புதுபுதுப் பிறவி எடுக்க வைக்கும் தெய்வீகத் தமிழ் மொழியின் திருவிளையாடலில் பலரின் வாழ்க்கையில் பெரு மாற்றம் ஏற்பட்டுள்ளது தமிழ் மொழி பலரின் வாழ்க்கையில் திருவிளையாடல் புரிந்து தனக்கு கென்று ஒரு மறுமலர்ச்சிப் பாதையை உருவாக்கிக் கொள்கிறது. இந்த மின்யுகக் காலத்தில் தமிழ் மொழி பேசுவோரே குறைந்து வரும் காலத்தில் தமிழ் மரபுக் கவிதையை சந்தவசந்தம் என்ற குழு குன்றிலிட்ட குத்து விளக்காக ஏற்றி இளம் மரபு கவிஞர்களுக்கு வழி காட்டியவர், இலந்தை இராமசாமி.
இலந்தை என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அவர்கள் தம் பெற்றோருக்கு எட்டாவது பிள்ளையாக 1942 ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி பிறந்தார். அவரது பிறந்த ஊர் கயத்தாறு அருகில் உள்ள தெற்கு இலந்தைக் குளம் கிராமம்..அங்கு எட்டாவது வகுப்பு வரை படித்தார். வகுப்பில் எப்போதும் எதிலும் முதல் மாணவராகத் திகழ்ந்த இராமசாமியின் புத்திசாலித்தனம் அவரது பள்ளித் தலைமை ஆசிரியரின் கவனத்தை ஈர்த்தது. அதன் பின் அவருடைய தலைமை ஆசிரியரின் நண்பரும் தூத்துக்குடி வ்.வ.உ.சி கல்லூரியின் முதல்வருமான பேராசிரியர் அ. சீனிவாச ராகவனின் இல்லத்தில் தங்கி தன் உயர்கல்வியை முடித்தார். 1958ல் இருந்து 1962ம் ஆண்டுவரை அந்த நான்கு ஆண்டுகளில் தமிழ் மொழி விதையாய் அவர் மூளைக்குள்ளும் இதயத்திற்குள்ளும் விழுந்தது. பேராசிரியர் அ. சீனிவாசராகவனின் இல்லத்திலிருந்த நூலகத்திலேயே தன் ஓய்வு நேரத்தைக் கழித்த மாணவர் இராமசாமி தன் இலக்கிய அறிவைஅந்தச்சிறு வயதிலேயே தனக்குள் வாங்கிக் கொண்டார். அவருக்கு இருந்த அதீத நினைவாற்றலின் காரணமாக அவர் படித்த இலக்கியங்கள் அவர் மூளையைத் தாண்டி அவரது ஒவ்வொரு உயிரணுவிலும் குடி கொண்டது. தன் மாணவனின் அறிவாற்றலின் ஆணி வேருக்கு உரம் இடும் விதமாகத் தினம் உணவு வேளையில் கவிதை இலக்கியம் பற்றிய விவாதம் நடக்கும். அதுமட்டுமல்ல ஈற்றடி கொடுத்து முதலடி எவ்வாறு வர வேண்டும் என்ற குறிப்பும் கொடுத்து வெண்பா பாடும் பயிற்சிகளையும் அடிக்கடி மாணவன் இராமசாமிக்குப் பேராசிரியர் கொடுத்து வந்தார். ஆசிரியரின் பயிற்சியும் மாணவனின் அயராத உழைப்பும் சவுக்கை என்ற தன் கவிதையை இராமசாமி எழுதக் காரணமாக இருந்தது. தான் கலந்து கொள்ளும் காரைக்குடி கம்பன் விழாவிற்கும் மற்றும் பல இலக்கியக் கூட்டங்களுக்கும் தன் மாணவரையும் தன்னோடு அழைத்துச் சென்றார் பேராசிரியர். தமிழ் பேரறிஞர்கள் கி.வா.ஜ போன்றோரையும் சந்திக்கும் வாய்ப்பு மாணவன் இராமசாமிக்கு இதனால் கிடைத்தது. ஆசிரியர் கொடுத்த உந்துதலினாலும் தனக்கே இருந்த இயற்கையான அறிவாற்றல் இலக்கிய ஆர்வத்தினாலும் இளமையிலேயே கி. வா. ஜ எழுதிய கவி பாடலாம் என்ற நூல் தொடராக மஞ்சரி பத்திரிக்கையில் வரும் போது படித்து தன் தமிழ் இலக்கண அறிவையும் அவர் மேம் படுத்தியுள்ளார். பேராசிரியர் அ.சீனிவசராகவனின் தலைமையில் 1962ம் ஆண்டு இராமசாமி அவர்களின் முதல் கவியரங்கம் நடந்தது. 1965 வரை தூத்துக்குடியில் இருந்த இராமசாமி அவர்கள் தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஆர்வத்தால் கற்றார். அதன் பிறகு வ.உ.சிக் கல்லூரியில் மூன்றாண்டுகள் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு இளநிலைப் பொறியாளராகத் திருவனந்தபுரத்தில்1966 வரை பயிற்சி பெற்றார்
1966 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த அவர்.1968ல் பானுமதி என்னும் அன்பு நங்கையை வாழ்க்கைத் துணையாகக் கைபிடித்தார். இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்துவைத்த இராமசாமியின் வாயிலைத் தமிழ் மகள் அவரது இல்லத்தின் மேல் மாடியில் வசிக்கும் பால சுப்பிரமணியம் என்ற நண்பரின் உருவில் தட்டினாள். பலசுப்பிரமணியம் பாரதி கலைக்கழகத்தின் பொருளாளரான அவர் இளம் கவிஞர் இராமசாமியை ஒரு குழந்தைக் கவியரங்கத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். 1971ம் ஆண்டு அவர் கலந்து கொண்ட அந்தக் கவியரங்கத்தில் தான் ஒரு குழந்தைக் கவிஞராக வளர வேண்டும் என்ற ஆர்வத்தைக் கவிஞர் இராம சாமிக்குத் தந்தது. அதனால் நூற்றுக்கணக்கான குழந்தைக் கவிதைகளை எழுதிய இராமசாமி அவர்கள் பின் பல மாதாந்திரக் கவியரங்குகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். 1981ம் ஆண்டு அவருக்கு கவிமாமணி என்ற பட்டம் கிடைத்தது. அன்று தொடங்கி இன்று வரை பல்வேறு கவியரங்குகளில் பன்னாடுகளில் மரபுத் தமிழ் தூதுவராகத் தமிழ் மொழியின் காவலராக கலந்து கொண்டுள்ளார். இராமசாமி அவர்கள் சிலம்பில் தெறித்த முத்துகள் என்ற சிலம்பாட்ட நாயகனைக் கொண்டு எழுதிய நாவல் அமுதசுரபி இதழில் முதல் பரிசு பெற்றது. பாரதியின் வாழ்க்கையை இவர் வில்லுப்பாட்டாக எழுதி இருக்கிறார். ஐயப்பன் வில்லுப்பாட்டு ஒன்றையும் இவர் எழுதி இருக்கிறார். இவர் இதுவரை எழுதிய நூல்கள் நாற்பத்து எட்டு, மரபுக் குழுவின் தலைவராகச் செந்தமிழ் வளர பெரும் பாடு பட்டு உழைக்கிறார். இன்றைய மின்னுலகத்தில் மரபுக் கவிதையை, செய்யுள் வடிவ இலக்கியத்தை முதல் முதலில் முறைப்படுத்தித் தவழ விட்டவர் இலந்தை இராமசாமி அவர்கள் என்றால் மிகையாகாது.இன்று அவருடைய உழைப்பால் புலம் பெயர் தமிழர்கள் பலர் மரபு இலக்கணத்தில் ஆர்வம் காட்டுவதோடு அதைக் கற்று கவிகள் படைக்கவும் முனைகிறார்கள். தனது மகனையும் மகளையும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த இலந்தை அவர்களின் தமிழ் பணி புலம் பெயர் தமிழர்களின் வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது. சிங்கப்பூர், அமெரிக்கா, ஏமன் ஆகிய நாடுகளில் பல சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். வட அமெரிக்கப் பேரவையிலும் கவியரங்கங்களை தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.
புலம் பெயர்ந்த தமிழ் குழந்தைகள் தமிழ் வரலாறு , கலாச்சாரம் ஆகியவற்றில் அவர்கள் மனதில் பதியும் வண்ணம் மார்க்கண்டேயன், கண்ணகி, ஞானப்பழம் ஆகிய கவிதை நாடகங்களை இயற்றி இயக்கி உள்ளார் கண்ணன் ஏன் தேம்பித்தேம்பி அழுகிறான் – குழந்தைப் பாடல்கள் படிக்கும் பெரியவர்களையும் குழந்தையாக்கிக் குதுகலிக்க வைக்கும் வண்ணம் அமைந்துள்ளன.
வட மொழியில் உள்ள கனகதார சுலோகம் பஜ கோவிந்தம் ஆகியவற்றை தமிழில் மொழியாக்கம் செய்து உள்ளார். பல பயணக் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இதுவரை சந்தவசந்தம் என்னும் மரபுக் கவி குழுமத்திலும் முகநூல் வழியாகவும் மரபுக் கவிதைகளுக்கான கவியரங்குகளை நடத்தி வருகிறார்.மரபுச்செய்யுள் இலக்கியத்திற்கு இவர் காட்டும் ஆர்வமும் இவரால் செய்யுள் இலக்கணங்களின் விழிப்புணர்வும் பயன்பாடும் இன்றைய தமிழர்களிடையில் அதிகரித்து இருக்கிறது என்றால் மிகையாகாது. இதனால் இவரை மரபுச் செய்யுளின் வளர்ப்புத் தந்தை என்று அழைத்தாலும் தவறில்லை.
very nice