திருக்கோவிலை விட்டு வீதியிலே தள்ளிய தெய்வத்திற்கு வெறும்காகித அளவில் கொண்டாட்டமா? சமூக தளங்களில் இருபாலரும் வாழ்த்துச் செய்தி பரிமாறிக் கொண்டாடினால் மகளிரின் பெருமையை அந்த ஆண்டு முழுவதும் ஒரு சமுதாயம் உணர்ந்து நடந்து விட்டதாகப் பொருளாகி விடுமா? மேடை போட்டுப் பேசிவிட்டால் நீங்கள் மகளிரை மதித்ததாக ஆகிவிடுமா? கண்டிப்பாக ஒவ்வொரு நாளும் பல சாதனைகள் புரிந்த பெண்களை நாம் கொண்டாட வேண்டும் தான். ஆனால்
பெண்மை உணர்வுக்கு முதுகில் ஒரு தட்டுக் கொடுத்தலோடு சமுதாயத்தின் கடமை முடிந்து விட்டதா?
ஒரு ஆணின் விந்தைத் தன்னுள் வாங்கி ஒரு அழியா விருட்சமாக மனிதக் குலத்தையே உருவாக்கும் பெண்மையைக் கொண்டாட ஒரு நாள் போதுமா?
உண்மையில் பெண்மையை நாம் கொண்டாடுகிறோமா?
தேவாலயத்தின் பாதிரியார் ஒரு சிறுமியை இன்று பாலியல் பலாத்காரம் செய்தி வந்துள்ளது. தன்னுடைய மணப்பெண்ணையே ஒரு மணவாளன் கற்பழித்து இருக்கிறான். . ஒரு தகப்பனே தன் மகளை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார்.
இவர்களுக்கெல்லாம் இந்த மகளிர் தினக் கொண்டாட்டம் என்ன சொல்கிறது?
கள்ளிப்பால் குடித்தும் சாகாமல் இன்று சாதனை புரியும் பெண்மணிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை நாம் கொண்டாட வேண்டும் தான்.
ஆனால் அவர்களின் சாதனைகளின் பின்னால் எத்தனை மரணவேதனைகள் மனவலிகள்
மாண்பு மிகு என்று மரியாதையாக அழைக்கப்பட்ட முதலமைச்சர் பல லட்சம் மக்களால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஒரு பெண்மணி மூடிய கதவுகளுக்குப் பின்னால் அனுபவித்தக் கொடுமைகள் யாருக்குத் தெரியும். திரையில் நிழலாய் வாழ்ந்து நிஜத்தை தன் புன்னகை என்ற இரும்புத் திரையால் மறைத்தே பொது வாழ்க்கைக்காக வேடம் போட்ட அந்தப் பெண்மணி எத்தனைச் சாதித்து இருந்தாலும் எப்படிப்பட்ட தனிப்படுத்தப்பட்ட மரணம்.
முன்னாள் முதலமைச்சரின் மறைவிற்குப் முன்னால் நம்மில் ஒருவராவது அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யோசித்துப் பார்த்து இருப்போமா? இன்று அவரது மரணம் ஒரு அரசியல் விளையாட்டிற்குத் தளமாகி உள்ளது, ஆனால் ஜெயலலிதா என்ற பெண்மணியின் உள்ளக் கிடக்கைகள், அவர் வாழ்வில் அவர் சந்தித்த ஏமாற்றங்கள், துரோகங்கள் அவர் அனுபவிக்கத் தேவையானது தானா?
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆயுசு என்பதும் அறிவு என்பதும் மனம் என்பதும் பொதுவானது தான். ஒரு மனித உயிருக்கு என்னென்ன ஆசைகள்,ஏக்கங்கள் உணர்ச்சி வெளிப்பாடுகள் எல்லாமே இரு பாலருக்கும் சமம். ஆனால் பெண் மட்டும் தன்னையே தியாகம் செய்ய வேண்டும். குடும்பத்தின் நலத்திற்காக, சமுதாயத்தின் நலத்திற்காக அவலின் தியாகம் தேவையான ஒன்று என்ற மழுப்பல் உண்டு.
ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்விக்காகக் கொடுக்கப்படும் விலையும் உழைப்பும் ஒன்று தான் ஆனால் பெண்ணின் கல்வி திருமணம், குடும்பம் என்ற கல்லறைக்குள் புதைக்கப்படுகிறது. பொருளாதாரத் தேவைக்கு மட்டுமே அவளுடைய கல்வி பயன்படும் என்ற நிலையில் ஒரு சமுதாயம் உள்ளது குடும்பத்தின் உள்ளே எத்தனைக் கொடுமைகள். தினமும் கணவரிடமும் காதலனிடமும் தகப்பனிடமும் அடி உதை வாங்கும் பெண்கள் எத்தனை.
தன் மகளின் வெற்றியைக் கொண்டாடும் தகப்பன் தன் மனைவியின் வெற்றிக்கு வழிகாட்டுபவனாக இருக்கிறானா? தன் தாயின் மனவலிமை உடையாமல் இருக்க ஒரு தாயுமானவனாக இருக்கிறானா என்றக் கேள்விக்கு, சிதறித் தெறித்த கடல்நுரை போல ஒரு சில ஆண்களே உள்ளனர்.
தீயில் வெந்துக் கருகிப் போகும் சதை வடிவில் உள்ள ஒரே வேறுபாடு மட்டுமே பெண்மையை ஒரு புறந்தள்ளப்பட்ட ஒரு தனி சாதியாக நடத்தச் சமுதாயத்திற்கு அனுமதி கொடுக்கிறது,
அதற்கு கலாச்சாரம், பண்பாடு என்று ஒரு அழகிய வண்ணம் வேறுபாடு!இந்த நிலை சமுதாயத்தில் தொடர்ந்தால் பெண்ணினம் என்பது அருகி வரும் உயிரினங்களில் ஒன்றாக அறிவிக்க வேண்டியிருக்கும்.