
என்சாதியும்…..
-கவிதாயினி வாணமதி
தோழியே
சந்திந்த வேளை
உனக்கும் எனக்குமான
தொடர்பு
கண்மணிகளில்
கணக்கிட்டுச் சங்கமிக்கவில்லை
ஊரறியா உறவறியாத்
உயிரறியாத் தொடர்பு
உனக்கும் எனக்குமாக
என்றோவொருநாள்
திட்டமிடப்பட்டதா?
அதுவும் புரியவில்லை
சிரித்துப்பேசும்
உறவாக
நீயுமில்லை நானுமில்லை
கருவில் சுமந்தவளாக
கைகோர்த்தவளாக
இடுக்கண் வருங்கால்
இடித்துரைப்பவளாக
இன்பத்திலும் துன்பத்திலும்
இணைந்திருப்பவளாக
எங்கிருந்தோ
வந்தாய்
இறுதி வரையும்
என்னுடனே இருப்பாய்
ஏனெனில்
என்சாதியும்
உன்சாதியும்
ஒன்றே தோழி