மகளே
நீ
இன்று
வேர் விட்டு
துளிர்விட்டு
இளங்கன்றாய்
மார்பு முட்டி
இன்று
மரமாகி நிற்கின்றாய்
ஆனால்
எனக்கு நிழலாக
நீ
மறந்தாய்
உன்
பூக்கள் காயாகி
கனியாகின்ற வேளையில்
உன் வேருக்கு
உரமாக
நான் மாறுகின்ற வேளையில்
என் மகளே
என் ஆசியாக
ஒரு வார்த்தை
தனக்கு மிஞ்சி தான்
தானமும் தர்மமும்
அதனால்
ஒரு முறை வாழ்ந்தாலும்
தன்னைத் தந்து
தன் சிசுவிற்காய்
வாழும் தாய் வாழையாய்
மாறாதே!
நீ வளர வளர
உன்னை வெட்ட வரும்
மின்சாரக் கோடலிகளும்
தூள் தூளாய் போகும் படி
உன்னைத் தாங்கும்
வேரோடு
விழுதுகளையும் வளர்த்துக் கொண்டு
ஆலமரமாய் நிமிர்ந்து விடு!
வாழையாய் வளர்ந்த நீ
ஆலமரமாகும் வரை
என் நிழல் உனக்குண்டு!